உடையார்கட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களின் பிரச்சினை தீர்த்துவைப்பு
உடையார்கட்டில் உண்ணாவிரத போராட்டம் இருந்த வணிகர்களின் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
உடையார்கட்டு பகுதியில் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் பயன்பாட்டில் இருந்து வந்த காணியில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நான்கு வணிகர்கள், ஆலயத்துடன் வாடகை ஒப்பந்தத்தின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக பிரச்சினை உருவாகி, அவர்கள் கடந்த 30.032.2026 அன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க ஆகியோர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், இருதரப்பினரும் இணக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒப்புக்கொண்டனர்.
இடம்பெற்ற பேச்சுவார்த்தை
இதனையடுத்து, மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான கௌரவ உபாலி சமரசிங்க தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்கமைப்பில், நேற்று (02.04.2026) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இரு தரப்பினருடனும் விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்போது, குறித்த காணி தொடர்பான சட்ட ரீதியான உரிமைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபரால் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், சட்டப்பூர்வ நடைமுறைகளுக்கு அமைவாகவும், ஸ்ரீமுருகன் ஆலய நிர்வாகத்தின் இணக்கப்பாட்டுடனும் குறித்த பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.
அதாவது ஆலயத்தின் வங்கிக்கணக்கிற்கு நான்கு கடை உரிமையாளர்களும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் வாடகை பணத்தினை வங்கியில் வைப்பிலிட வேண்டும் பிரதேச செயலகத்தில் அதற்கான பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான கௌரவ உபாலி சமரசிங்க கருத்து தெரிவிக்கும் போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் நடவடிக்கைககள் குறித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


