மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
மக்களின் விருப்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பூநகரி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் தொழிற்பேட்டைகளால் மக்களுக்கோ அன்றி பிரதேசத்தின் சுற்றுச் சூழலுக்கோ எதுவித பாதிப்புகளும் இல்லை என விஞ்ஞானரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்திலேயே அது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சிமெந்து தொழிற்சாலை உள்ளிட்ட பல முதலீடுகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற நிலையில், சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக மக்களுடன் ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (30.03.2024) நடைபெற்றது.
பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற குறித்த இக்கலந்துரையாடலில், சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் துறைசார் அதிகாரிகள், என பலர் கலந்துகொண்டு தமது கருத்தக்களை தெரிவித்திருந்தனர்.
இதன்போது கலந்துரையாடலில் கலந்துகொண்ட பொதுமக்கள் பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகள் மற்றும் முதலீடுகளால் மக்களுக்கும், பிரதேசத்தின் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்புகள் இல்லையென விஞ்ஞான ரீதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என உறுதிப்படுத்தப்படுமாயின் அவற்றை நடைமுறை ரீதியாக செயற்படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் தமக்கில்லை என்றும் அவ்வாறான முதலீடுகளுக்கு தாம் தடையாக இருக்கப்போவதில்லை எனவும் தமது உணர்வுகளை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தபின் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். இந்தவிடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், வடக்கில் பூநகரி நகரை ஒரு பொருளாதார நகரமாக உருவாக்கும் முயற்சியாகவே சிமெந்து தொழிற்சாலை, காற்றலை மின் உற்பத்தி, சுண்ணக்கல் அகழ்வு. கடற்பாசி வளர்ப்பு, கடலட்டைப் பண்ணை உள்ளிட்டபல திட்டங்களை முன்னெடுக்க திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தும் முன்னர் அப்பகுதியில் வாழும் மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியது அவசியமாகும். அதனடிப்படையிலேயே இந்த பகுதி மக்களாகிய உங்களின் கருத்துக்களை கேட்றிந்துகொள்வதற்கான கூட்டமாக இது கூட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இங்கு உங்களது கருத்தக்களே முதன்மை பெறும். இது உங்களது பிரதேசத்தின் பொருளாதார வளர்சிக்கான ஒன்றாகும். ஆனாலும் அதன் சாதக பாதகங்கள் ஆராயப்படுவது அவசியமாகும். அந்தவகையில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து உங்களின் கருத்தக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இங்குவாழும் மக்களாகிய உங்களின் எதிர்பார்ப்பகளின்படி மக்களுக்கோ அன்றி பிரதேசத்தின் சுற்றுச் சூழலுக்கோ எதுவித பாதிப்புகளும் இல்லாது முழுமையான விஞ்ஞானரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்திலேயே திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |