"ரணில் என்ற பூச்சாண்டியை காட்டியே 69 லட்சம் வாக்குகளை பெற்றோம்"
ரணில் விக்ரமசிங்க என்ற பூச்சாண்டியை காட்டியே அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 69 லட்சம் மக்களின் ஆணையை பெற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற சுதந்திர மக்கள் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது பொதுஜன பெரமுனவின் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் சிலர் நெலும் மாவத்தையில் தினமும் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்துகின்றனர்.
ரணில் விக்ரமசிங்க என்ற பூச்சாண்டியை காட்டினோம்
பொதுஜன பெரமுனவை ஆரம்பிக்கும் போது,அது ஜீ.எல்.பீரிஸின் குப்பை வாய்க்கால் என்றனர். ரணில் விக்ரமசிங்க என்ற பூச்சாண்டியை காட்டினோம். அந்த பூச்சாண்டியை கொடுத்தே 69 லட்சம் வாக்குகளை பெற்றோம்.
அப்போது மத்திய வங்கியின் பட்டப்பகல் கொள்ளை எனக் கூறினர். ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு எனக் கூறினர்.நாங்கள் விரலை நீட்டி குற்றவாளி எனக் கூறிய நபரை ஏற்பட்ட அரசியல் அனர்த்தத்திற்கான பதில் என்று தெரிவு செய்தனர்.
மக்கள் ஆணை கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது
69 லட்சம் என்ற மக்கள் ஆணையை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். பொருளாதாரம் மட்டுமல்ல 69 லட்சம் என்ற மக்கள் ஆணையும் கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இதனால், இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சுதந்திரத்தின் மக்கள் சபை என்ற வகையில் தீர்மானித்தோம் என டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.