வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரிடம் யாழ். மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
யாழ். சாவகச்சேரி - பருத்தித்துறை இணைப்பு வீதி (தபாற்கந்தோர் வீதி) புனரமைப்புப் பணியின் போது நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற்கொள்ள வேண்டும் என சாவகச்சேரி கெருடாவில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கோரிக்கை
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“சாவகச்சேரி - பருத்தித்துறை வீதி (தபாற்கந்தோர் வீதி) புனரமைப்புப் பணி தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் கெருடாவில் பகுதியில் மாரி காலத்தில் வெள்ள நீர் வடிந்தோடி குளத்திற்கு செல்லும் முகமாக கெருடாவில் சந்தியில் வீதியை சற்று தாழ்வாக அமைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
இதன் போது கெருடாவில் சந்தியில் நீர் பாய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தாத பட்சத்தில் மாரி காலத்தில் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.
இதற்கமைய இதனைக் கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் நீர் வடிந்தோட ஏற்ற வகையில் தபாற்கந்தோர் வீதியை புனரமைக்க வேண்டும்”என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .