மகிந்த ஆதரவாளர்களின் பரிதாப நிலை! நள்ளிரவு தாண்டியும் நீருக்குள் உயிருக்காக போராட்டம் (Video)
புதிய இணைப்பு
கொழும்பில் நேற்றையதினம் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக வாவியில் தூக்கி வீசப்பட்ட மகிந்த ஆதரவளார்கள் இன்னும் வாவிக்குள் இருந்து வெளியே வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. மேலும், வாவிக்குள் உறைந்த நிலையில் நடுங்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அமைதியான முறையில் கடந்த ஒரு மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிரான நடந்து வந்த போராட்டம் நேற்றைய தினம் மகிந்த ஆதரவாளர்கள் என்ற பெயரில் களமிறக்கப்பட்ட அடாவடி கும்பல்களால் சீர்குலைக்கப்பட்டது.
இதன் காரணமாக இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கலவரங்கள் வெடித்து, பிரதமர் பதவி விலகி, முக்கிய பிரபலங்கள் வீடுகள் எரிக்கப்பட்டு, உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டு தமது ஆதங்கத்தை பொதுமக்கள் வெளிப்படுத்திய பல வரலாற்று சம்பவங்கள் நேற்றையதினத்தில் அரங்கேறியிருந்தன.
இந்த நிலையில் பொதுமக்களால் பேஹ்ர வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட மகிந்த ஆதரவாளர்கள் இதுவரை வெளியில் வராமல் நீருக்குள் உயிருக்கு போராடி வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரத்தின் போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை பொதுமக்கள் தாக்கியதோடு பெஹீர வாவிக்குள் தள்ளியுள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வந்த அமைதி வழியான போராட்டம் இன்று குழுப்பப்பட்டது.
பிரமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் என்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் சென்ற குழுவினர் போராட்டக் களத்தில் உள்ள கூடாரங்களை எரித்தும் அடித்து உடைத்தும் அராஜக செயலில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக போராட்டக் களம் யுத்தப் பூமியாக மாறியதை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் என்று தெரிவித்து வந்தவர்களை வாவிக்குள் பொதுமக்கள் தள்ளியுள்ளனர்.