மதுபான நிலையத்தின் அனுமதியை இரத்து செய்யக் கோரி பிரதான வீதியை மறித்த மக்கள் (Photos)
மதுபான நிலையமொன்றின் அனுமதியை இரத்து செய்யக்கோரி மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியை மறித்து பொது மக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று (19.10.2023) காலை கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுபான நிலையத்திற்கான அனுமதி
வைத்தியசாலை, பிரதேச செயலகம், பிரதேச சபை, கமநல சேவைகள் திணைக்களம், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், தொழிற்பயிற்சி நிலையம், விளையாட்டு மைதானம், பெண்கள் தொழில் நிலையம் என முக்கிய சேவை நிலையங்கள் உள்ள பகுதியில் அனுமதிக்கப்பட்ட குறித்த மதுபான நிலையத்திற்கான அனுமதியை இரத்து செய்யக் கோரியே குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இந்த மதுபானசாலை அண்மையில் திறக்கப்பட்டதிலிருந்து விளையாட்டு மைதான நிகழ்வுகளில் பல்வேறு குழப்பகரமான நிலைகள் தோற்றுவிக்கப்படுவதாகவும், சிறியவர்கள் மது பழக்கத்துக்கு ஆளாவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
சீர் செய்யப்பட்ட போக்குவரத்து
போராட்டம் காரணமாக சுமார் 30 நிமிடம் வரையில் அவ்வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி பின்னர் போக்குவரத்தினை சீர் செய்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவாக, பூநகரி வர்த்தகர்களும் கடைகளை அடைத்து ஆதரவு வழங்கியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.