முல்லைத்தீவில் வீதியபிவிருத்தி அதிகார சபையினரோடு முரண்பட்ட மக்கள்
முல்லைத்தீவில் மரங்களின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வீதியபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்களுக்கு ஒத்துழைக்காது பொதுமக்கள் முரண்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த (04.01.2025) காலையில் இருந்து சிலாவத்தை சந்திக்கும் பாடசாலைக்கும் இடையில் உள்ள உயரமான ஆலமரத்தின் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் வீதியபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் உள்ள இந்த மரத்தின் கிளைகளை வெட்டும் போது அவை வீதியில் விழுவதால் அனர்த்தத்தை தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் போக்குவரத்து இடையிடையே இடைமறிக்கப்பட்டுள்ளது.
இதன் போதே ஒத்துழைக்காத இயல்பினை வெளிப்படுத்தியவாறு மறிக்கப்பட்ட பொதுமக்களில் சிலர் முரண்பட்டிருந்தனர்.
அதிருப்தியடைந்த பணியாளர்கள்
மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள போது ஏற்படும் சிறிய சிரமத்தைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனரே என கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளரொருவர் தன் அதிருப்தியை தெரிவித்திருந்தார்.
ஒழுங்குபடுத்தலில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் குறிப்பிடும் போது " தலையில் விழுந்ததாலும் பிரச்சினை.அதை வெட்டும் போது மறித்தாலும் பிரச்சினை.மாற்றுவழிகள் உள்ள போதும் அதனை பயன்படுத்தி பயணிக்க முயற்சிக்காது முரண்பாடான கருத்துகளை வெளிப்படுத்துதல் அதிருப்தியாக இருப்பதாக குறிப்பிட்டார்.
மழை, வெய்யில் என்று பாராது கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் பகுதிகளில் வீதியை பராமரித்து போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்களுக்கு உதவியாக இவர்கள் இருந்து வருவதை தொடர்ந்து அவதானிக்க தன்னால் முடிவதாகவும் அவர்களது பணிக்கு ஒத்துழைப்பது அவசியம் எனவும் அவ்விடத்தில் தரித்து நின்ற வாகன சாரதி யொருவர் குறிப்பிட்டதும் இங்கே நோக்கத்தக்கது.
தொடர்ந்த பணிகள்
போக்குவரத்துக்கு அச்சுறுத்தும் வகையில் வீதியின் ஓரமாக உள்ள மரங்களை அகற்றுவதோடு முறிந்து விழும் நிலையில் உள்ள மரத்தின் கிளைகளையும் அகற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும், இரண்டாவது நாளாகவும் முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் வீதியபிவிருத்தி அதிகார சபையினரின் பணியாளர்கள் மரங்களின் கிளைகளை அகற்றுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.