உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் தொற்றின் எதிரொலி! உணவின்றி அவதியுறும் மக்கள்
உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் தொற்று பல நாடுகளில் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தந்த நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
இந்நிலையில்,சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு மீண்டும் கோவிட் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதுடன்,கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் உணவின்றி கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து சியான் நகரவாசி ஒருவர் ,“நான் காம்பவுண்டு வீட்டில் வசித்து வருகிறேன். அவசரத்துக்கு கூட நூடுல்ஸ் கிடைக்கவில்லை. இப்படியே இருந்தால் பட்டினி கிடந்து சாவ வேண்டியது தான்” என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.