வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்களை கண்டுகொள்ளாத அரசியல் வாதிகள்: சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு
தற்போது தேர்தல் காலம் இல்லாதபடியினால் வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (22.12.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
உடனடி உதவிகள்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் கட்சிகள் சென்று பார்வையிடவில்லை என்றும் உடனடி உதவிகள் எதனையும் வழங்கவில்லை எனவும் பாதிப்புக்குள்ளான மக்கள் கடும் விசனம் தெரிவித்துவருகின்றனர்.
குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவின் அநேக பகுதிகள் வெள்ள அனர்த்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தேர்தல் காலமாக இருக்குமாயின் குறித்த அரசியல்வாதிகள் அரை இறாத்தல் பாணும் பருப்புக் கறியுடனும் முண்டியடித்து வழங்குவது போன்று புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் தமது கருணை உள்ளங்களை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
மக்களுக்கான பணி
ஆனால் இது தேர்தல் காலம் இல்லாதபடியால் எந்த அரசியல் கட்சிகளும் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை.
ஆயினும் இறைமையுள்ள அரசாங்கம் தனது மக்களுக்கான பணியை முன்னெடுத்து வருகின்றது. அதனை எமது கட்சி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வடக்கில் நெறிப்படுத்தி வருகின்றார்.
ஆகவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயலாப அரசியல் மனநிலையை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவுவதே சிறந்த மக்கள் சேவை.
விக்னேஸ்வரனின் செயற்பாடு
மேலும், விக்னேஸ்வரன் தான் சமர்ப்பித்திருந்த விடயங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தவில்லை.
ஆகவே தான் ஜனாதிபதி அழைத்து சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் தன்னுடைய திட்டங்களை நாடாளுமன்றில் பிரேரணையாக சமர்ப்பித்து அது விவாதிக்கப்பட்டு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு பொறிமுறை என்பது அவர் அறியாத விடயமல்ல.
தான் தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை ஜனாதிபதியிடம் கொடுத்தவிட்டேன் அதை அவர் நடைமுறைப்படுத்தவில்லை.
அதனால் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது அவரிடம் தமிழ் மக்கள் தொடர்பான தெளிவான அரசியல் நிலைப்பாடு இல்லை என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது.
உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டில் அக்கறை இருக்குமாக இருப்பின் அவர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தன்னுடைய நிலைப்பாடடை வலியுறுத்தியிருக்க வேண்டும்.
அதைவிடுத்து ஜனாதிபதியிடம் அன்று கொடுத்தேன் இன்று கொடுத்தேன் அவர் நடைமுறைப்படுத்தவில்லை என கூறுவதும் ஒரு நகைப்புக்குரியது.
வடக்கின் முதலமைச்சராக இருந்தபோது இவர் எவ்வாறு திறனற்றவராக ஒரு மாகாண சபையை நிர்வகிக்க முடியாத ஆளுமையற்றவராக இருந்தவர் என்பதும் எமது மக்கள் நன்கு அறிவார்கள்.
அதேபோன்று ஆற்றலும் அனுபவமும் நிர்வாக ஞானமும் இல்லாத விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைமூலம் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் என்ன என்பதையும் இந்த உலகே அறியும்.
அவ்வாறிருக்கும்போது தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்தால் தான் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க தயார் எனவும் சூழுரைத்துள்ளார்.
ஆகவே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் விக்னேஸ்வரனிடம் எந்தவிதமான திட்டமும் இல்லாதவிடத்து இவ்வாறான சாக்குப்போக்கை சொல்லித்தான் கூட்டங்களை தவிர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன் விக்னேஸ்வரன் நிர்வாக ஞானம் என்ன என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகே அறியும். ஆகவே அது தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |