மன்னார் - மாந்தை பிரிவில் சீரற்ற காலநிலையால் மக்கள் இடம்பெயர்வு (Photos)
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களை சேர்ந்த 438 மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் - யாழ்ப்பாணம் A-32 வீதியில் காணப்படுகின்ற பாலியாறு பெருக்கெடுத்ததன் காரணமாக தேவன்பிட்டி கிராமத்திற்கு நீர் உட்புகுந்து உள்ளது.
இதன் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நீரில் மூழ்கும் நிலை
இவர்களுக்கான சமைத்த உணவினை மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வழங்கி வருகின்றனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மாவட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளார்.
பாலியாறு, பறங்கியாறு நீர் மட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மன்னார் - யாழ்ப்பாணம் (A 32) பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுகின்றமையினால் அவ் வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.