திருகோணமலையில் 3,600 ஏக்கர் காணியை மீட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை (video)
3,600 ஏக்கர் காணியை மீட்டுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் திருகோணமலை-திரியாய் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட கிளையின் தலைவர் எஸ்.குகதாசன் தலைமையில் திரியாய் பிரதேசத்தில் பொதுமக்கள் பிரச்சினைகள் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று நேற்றைய தினம் (10.04.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, எம். ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனிடம் திரியாய் மக்கள் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
நல்லாட்சிக் காலத்தில் குறைந்த காணிகள்
மேலும், திரியாய் கிராமம் பல்வேறு தரப்புக்களாலும், பங்கு போட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது. நாங்கள் வாழ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
திரியாயில் உள்ள கிரிஹன்டுசாய விகாரையின் விகாரதிபதி தனது விகாரைக்கு 2010ஆம் ஆண்டில் 3,600 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருந்ததாகவும், இது நல்லாட்சிக் காலத்தில் 257 ஏக்கராக குறைக்கப்பட்டு விட்டதாகவும் 3,600 ஏக்கர் காணியை தனக்கு மீண்டும் அளந்து தருமாறு பல மட்டங்களிலும் வலியுறுத்தி வருகின்றார்.
இந்த 3,600 ஏக்கர் நிலப்பகுதியை அளப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து குச்சவெளி பிரதேச செயலாளருக்குக் கடிதம் வந்துள்ளதாகவும், கிரிஹன்டுசாய விகாரைக்கு 3,600 ஏக்கர் நிலம் அளந்தால் எமது வயல் நிலங்களும் வீடு வளவுகளும் அதற்குள் சென்று விடும் எங்களுக்கு வாழ வழி இருக்காது. நாங்கள் எல்லோரும் கடலிலே குதிக்க வேண்டிய சூழல்தான் வரும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
கிரிஹன்டுசாய விகாரையின் விகாரதிபதி திரியாவில் பரவி பாஞ்சான் என்ற இடத்தில் உள்ள தமிழர்களின் ஒப்பக்காணிகளை துப்பரவாக்கி நெல் பயிரிட்டு வருகின்றார்.
விவசாயம் செய்ய முடியாத நிலை
மக்கள் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த பொழுதும் காத்திரமான ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொலிஸாரும், தாங்கலால் ஒன்றும் செய்ய முடியாதுள்ளது. இதை மேலிடத்தில் கதைத்துப் பாருங்கள் எனக் குறிப்பிடுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், ஆத்திக்காடு, பாவலன் கண்டல், நீராவிக் கண்டல் ஆகிய பகுதிகளிலே பல ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் விவசாயம் செய்து வரும் ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் நெல் வயலை தொல்பொருள் துறையினர் கற்களை போட்டு வைத்துள்ளதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்குள்ளே விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திரியாய் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே திரியாய் மக்களுக்குச் சொந்தமான 3,600 ஏக்கர் காணியை மீட்டுத்தருமாறும் இல்லாவிட்டால் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க நேரிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.







