தரம் குறைந்த மருந்தினால் பார்வையிழந்தவர்கள் கெஹெலியவுக்கு எதிராக வழக்கு
கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர்.
குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு
சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |