மட்டக்களப்பில் முறையான கழிவகற்றல் திட்டம் இல்லாததால் பாதிக்கப்படும் மக்கள்!
மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அந்தப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்தார்.
அத்தோடு, மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் பல முறைப்பாடுகளை முன்வைத்தும் அதற்கான தீர்வுகள் இன்றுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச சுற்றுச்சூழல் தினமான நேற்று(5.6.2026) மட்டக்களப்பு மாவட்ட கழிவகற்றல் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கழிவகற்றல் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று வரை ஒரு முறையான கழிவகற்றல் திட்டம் உருவாக்கப்படவில்லை.
ஒவ்வொரு பிரதேச சபை ஊடாக கழிவுகள் சேகரிக்கப்படுகின்ற போதும், மாவட்டத்தில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த கழிவுகளையும் மீள் சுழற்சி செய்து முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான இடமோ அல்லது ஒரு செயற்றிட்டமோ இதுவரை உருவாக்கப்படவில்லை.

காலத்திற்கு காலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கும் அவற்றில் இருந்து பசளை தயாரிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் கூட்டங்கள் நடைபெற்ற போதும் இதுவரை ஒரு உருப்படியான திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
சுகாதார சீர்கேடு
தற்போது வரை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கழிவுகளை கொட்டி திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையங்களை அமைத்துள்ளனர்.ஆனால் அதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு மிகப்பெரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

சர்வதேச சுற்றுச்சூழல் தினமான இன்று மட்டக்களப்பின் எதிர்காலத்தை பாதுகாப்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் .
நாம் இன்று பாதுகாக்கத் தவறினால், நாளை மட்டக்களப்பின் இயற்கை வளங்களையும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடும்." என தெரிவித்தார்.