நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக பாதிக்கப்படும் மக்கள்
பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் அபிவிருத்தி என்பது மக்களுக்கு ஆபத்து உண்டு பண்ணாத வகையில் அமைய வேண்டும்.
அந்தவகையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளில் உரியத் தரப்பினரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக பல நபர்கள் காயமடைந்த சம்பவங்களும், பல்வேறு விபத்து சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியை அண்டிய பல்வேறு பகுதிகளில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் மக்களுக்கான குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த செயற்பாடு மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தாலும், இந்த செயற்பாட்டை மேற்கொள்கின்ற நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பற்ற சில செயற்பாடுகள் காரணமாகத் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு மக்கள் காயமடைகின்ற நிலைமைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையிலே,குறித்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் அதற்குரிய வேலைகளை மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு அடையாளங்களை இடாது வீதியோரங்களில் பாரியளவில் வெட்டப்படுகின்ற குழிகளில் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக இந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் குழாய்களைப் பொருத்துகின்ற செயற்பாடுகளுக்காக வெட்டப்பட்ட கிடங்குகள் ஒழுங்காக மூடப்படாமையாலும், கிடங்குகளைச் சூழ அடையாளப்படுத்தப்படாமையாலும் குறித்த பகுதிகளில் விபத்துகள் அதிகரிக்கின்றன.
அண்மையில் அருட்தந்தை ஒருவரும் இவ்வாறு விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்.
எனவே ,அபிவிருத்தி என்பது மக்களுக்கு அவசியமாக இருக்கின்ற போதும் அதனை உரியமுறையில் செய்யாததன் விளைவாக ஏற்படுகின்ற இந்த விடயங்களை உரியவர்கள் கருத்திற்கொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிக விரைவாக இவ்வாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக வெட்டப்பட்ட கிடங்குகளை உரிய முறையில் மூடி இன்னும் வேலைகள் இருக்கின்ற பட்சத்தில் அதனைத் தெரியக்கூடிய வகையில், அடையாளப்படுத்தி சமிக்ஞைகளை இட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,இவ்வாறான செயற்பாடுகளால் தொடர்ச்சியாக விபத்துக்கள் சம்பவித்து பலர் காயம் அடைந்து வருகின்றனர் எனவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






