EPF - ETF க்கு பதிலாக ஓய்வூதியம்:அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(8.1.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அரசாங்கம் அவ்வாறான எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலதிக சலுகை
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிதி பொதுமக்களுடையது. அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு எவ்வித தடையுமின்றி பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அவசரத் தேவைகளுக்காக இந்த நிதியில் சுமார் 30 சதவீதத்தை பெற்றுக்கொள்ளும் வசதி தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நபரினதும் சலுகைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காது என்றும், மேலதிக சலுகைகளை வழங்குவதற்கே அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் கூறினார்.
மக்களின் பணம்
மக்களின் வியர்வை மற்றும் உழைப்பினால் சேமிக்கப்பட்ட பணம் அவர்களின் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படும். ஒரு ஓய்வூதியத் திட்டத்தைப் பெற முடிந்தால் நல்லது என்ற கருத்துக்கள் சமூகத்தில் நிலவுகின்றன.

ஆனால்,ஊழியர் சேமலாப நிதி பணத்தை ஓய்வூதியமாக மாற்றி, மொத்தத் தொகைக்கு பதிலாக மாதந்த ஓய்வூதியம் வழங்கும் தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.