கொஸ்கொட சுஜியின் நெருங்கிய உறவில் அநுர கட்சி பெண் உறுப்பினர் : அதிரவைக்கும் வாக்குமூலம்
தேசிய மக்கள் சக்தியின் பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சல குமாரி, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான "கொஸ்கொட சுஜி"யின் நெருங்கிய உறவினர் என தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் - எப்பாவல பகுதியில் உள்ள ஒரு முன்னணி ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஒருவர் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அனுராதபுரம் பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, அதிபருக்குச் சொந்தமான எப்பாவல பகுதியில் உள்ள ஹோட்டலை சோதனை செய்துள்ளார்.
இதன்போது ஹோட்டலின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 2 கிலோகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ. 20 மில்லியனை நெருங்கும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெரோயின் கடத்தல்
அதன்படி, சம்பந்தப்பட்ட அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சந்தேகத்திற்குரிய அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பேலியகொட நகரசபை உறுப்பினரான டிஸ்னா நிரஞ்சல குமாரி என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, அவருக்கு ஆதரவாக இருந்த அவரது நண்பர் தரிது தனஞ்சயவும் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்,
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த ஹெரோயின் தொடர்பான தகவல்கள் தெரியவந்தன.
அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிபரை விசாரித்தபோது, அவரது மூத்த சகோதரரின் மகன்களில் ஒருவர் டுபாயில் தங்கியிருப்பதாகவும், அவர் 'டுபாய் சஷி' என்று அழைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்
சந்தேகநபரான அதிபர், 'கொஸ்கொட சுஜி' என்ற போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன்படி, 'சஷி' டுபாயைச் சேர்ந்த தனது மகனுடன் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டதாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சல குமாரி, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் 'கொஸ்கொட சுஜி'யின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து டிஸ்னா நிரஞ்சல குமாரியின் வீட்டையும் பேலியகொட பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
இதே நேரத்தில், காவலில் உள்ள அதிபர் மற்றும் மற்றைய சந்தேகநபர் இன்று அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் தடயவியல் மருத்துவர் முன் முன்னிலைபடுத்தப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |