விமான நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்ட பீசிஆர் பரிசோதனைகள் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பீசிஆர் பரிசோதனை திடீரென நிறுத்தப்பட்டதன் தீவிரத்தை, மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தனவுக்கு (Asela Gunawardena) வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பீசிஆர் சோதனை இன்றி இலங்கைக்குள் வர முடியும். எனினும் 2 அளவு தடுப்பூசிகளை செலுத்திய தடுப்பூசி அட்டை, வருகைக்கு 72 மணி நேரத்திற்குள் பெறப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இலங்கைக்கு வெளியே பெறப்படும் பீசிஆர் அறிக்கைகளின் நம்பகத்தன்மையைக் கண்டறிய எந்த முறையும் இல்லாததால், இது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர் சம்மேளனத் தலைவர் ஏஎம்எஸ் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ (Lakkumar Fernando) தெரிவித்துள்ளார்.
போலி தடுப்பூசி சான்றிதழ்கள், பொய்யான பீசிஆர் அறிக்கைகள் இலங்கையில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளிலும் பெறப்படலாம். . இந்த சூழ்நிலையில், கட்டுநாயக்கவில் கட்டாய பீசிஆர் சோதனையை தவிர்ப்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.
அத்துடன் அண்மையில் பீசிஆர் சோதனைக்காக விமான நிலையத்தில், வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் பீசிஆர் சோதனையை நிறுத்தும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஃபெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் இந்த செயல்பாடு, ஆபத்தான கொரோனா மாறுபாடுகள், நாட்டுக்குள் வர அனுமதிக்கும். அத்துடன், சமுதாயத்தின் அனைத்து பிரிவினரிடமிருந்தும் இதுவரை பெறப்பட்ட கடினமான கட்டுப்பாட்டை முற்றிலும் அழித்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, இந்த அபாயகரமான சூழ்நிலையை சம்பந்தப்பட்ட நிபுணர்களின் பங்கேற்புடன் மீள்பரிசீலனை செய்து பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும் என லக்குமார் பெர்னாண்டோ ( Lakkumar Fernando) கேட்டுக்கொண்டுள்ளார்.