கடமை நிறைவேற்று அதிபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை
கஸ்ட பிரதேச பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாக நியமனம் பெற்று தற்போது அதிபர் தரத்தில் பணியாற்றி வரும் அதிபர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கஸ்ட மற்றும் அதி கஸ்ட பாடசாலைகளில் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாக நேர்முகத் தேர்வுகளில் மூலமாக அதிபர்கள் நியமிக்கப்பட்டதோடு, அவர்கள் 2012ஆம் ஆண்டு எட்டாம் மாதம் எட்டாம் திகதி அதிபர் தரத்துக்குள் உள்வாங்கப்பட்டு நிரந்தர அதிபர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
நீதியான பொறிமுறை
எனினும் இவ்வாறு நியமிக்கப்பட்ட அதிபர்களுக்கான நிர்வாக கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமலும் இடமாற்றச் செயற்பாடுகளில் அவர்களுக்கான நீதியான பொறிமுறை இன்மையினும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2013ஆம் ஆண்டு கல்வி சேவை தாபனத்தின் மேலதிக செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் கையொப்பமிட்டு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்பட்ட போது 'மிகை ஊழியர்' என்ற அடிப்படையில் இந்த அதிபர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டதன் அடிப்படையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 75 அதிபர்களும் இலங்கை பூராகவும் நூற்றுக்கணக்கான அதிபர்களுமாக தொடர்ந்தும் கொடுப்பனவுகள் மற்றும் இடமாற்றங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலைமை காணப்பட்டு வருகின்றது.
தொடர் புறக்கணிப்பு
குறித்த அதிபர்கள் 2018ஆம் ஆண்டு அதிபர் தரம் இரண்டிலும் 2024ஆம் ஆண்டு அதிபர் தரம் ஒன்றுக்கும் தரம் உயர்த்தப்பட்ட போதிலும் தகுதியான பாடசாலைகளில் அதிபர்களாக கடமையாற்றுவதற்கு மாகாண கல்வி அமைச்சு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இது தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தி தமக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை பின் தங்கிய பிரதேசங்களில் கடமையாற்றும் இவ்வாறான அதிபர்கள் தொடர்ந்தும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றமை தொடர்பிலும் கல்வி அமைச்சு கவனம் செலுத்துமா என்கின்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



