அதிக கடவுச்சீட்டு விநியோகம்! பொறிமுறையில் கோளாறு ஏற்படும் அபாயம்
நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகளவான கடவுச்சீட்டு விநியோகம் காரணமாக இயந்திரப்பொறிமுறையில் கோளாறு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோகப் பிரிவில் உள்ள இயந்திரங்கள் நாளொன்றுக்கு சராசரியாக 1500 வரையான கடவுச்சீட்டுகளை மாத்திரமே அச்சிடும் கொள்ளளவைக் கொண்டுள்ளன.
எனினும் வெளிநாடுகளுக்கு செல்லும் நோக்கில் வருகை தரும் ஏராளம் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் வீதம் மூவாயிரம் வரையான கடவுச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் கடவுச்சீட்டுகள் அச்சிடல்
அதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இரண்டு கடமை நேரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
காலை ஆறு தொடக்கம் மதியம் இரண்டு மணி வரை ஒரு கடமை நேரமும், இரண்டு மணி தொடக்கம் இரவு பத்து மணி வரை இரண்டாவது கடமை நேரமும் நடைமுறைபடுத்தப்படுகின்றது.
இந்நிலையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை காரணமாக தற்போதைக்கு மூவாயிரத்து இருநூறு வரையான கடவுச்சீட்டுகள் நாளாந்தம் விநியோகிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கடவுச்சீட்டு அச்சிடும் இயந்திரங்களின் அதிகூடிய செயற்பாடு காரணமாக அவற்றில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு கடவுச்சீட்டு விநியோகிக்கும் செயற்பாடுகளில் தடங்கல் ஏற்படலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.