கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய திட்டம்
இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் அங்குள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளுக்கான இணைய விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்காக சர்வதேச இடம்பெயர்வு அமைப்புக்கு (IOM) ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 20 தூதரகங்கள் மற்றும்அலுவலகங்களை உள்ளடக்கிய பயோமெட்ரிக் பிடிப்பு மையங்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதற்கும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையுடன் இணைய இணைப்பை எளிதாக்குவதற்கும், ஒருங்கிணைப்புக்கான பொருத்தமான அமைப்புகள்மற்றும் மென்பொருளை உருவாக்குவதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கும் இந்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
தேவையான தொழில்நுட்ப ஆதரவு
இதன்படி குறித்த திட்டத்துக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கும், அதனை செயல்படுத்த தேவையான நிதியை வழங்கவும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுகளை விரைவாகவும் எளிதாகவும் பெறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்ட 20 இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் இணையத்தினூடாக கடவுசீட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.