பயணிகள் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும்: வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர்
வவுனியா மாவட்டத்திலிருந்து பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்குச் சுழற்சிமுறையில் எரிபொருள் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமை தொடர்பாக வவுனியாவில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
''தனியார் பேருந்து தரப்பினராகிய நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றோம். குறிப்பாகப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் எமது பேருந்துகளுக்கான எரிபொருள் மிகவும் தாமதமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து கிடைக்கின்றது.
இதனால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையே வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளும் ஆரம்பமாக இருக்கின்றது. எனவே இந்த நிலைமை நீடித்தால் பாடசாலை மாணவர்களுக்கான சேவைகளை வழங்குவதிலும் பாரிய சிக்கல் நிலைமை இருக்கின்றது.
எனவே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு நாளாந்தம் தேவையான எரிபொருளைச் சுழற்சி முறையில் வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.
இதேவேளை அடுத்த வாரமளவில் கொழும்பிலிருந்து வடக்கிற்கு வரும் புகையிரதங்களின் சேவைகள் வீதிப்புனரமைப்பு பணிகளிற்காக இடைநிறுத்தப்படவுள்ளது.
எனவே பயணிகள் மேலும் அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் வடக்கிற்குள் சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்கு உரிய நேரத்தில் எரிபொருள் கிடைப்பதற்கு ஆவண செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை வழங்கும் ஊழியர்களிற்கு கையூட்டலை கொடுத்தே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இருக்கின்றது.
எனவே
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் என்ன நடக்கிறது என்று பரிசோதனை செய்யுமாறு
பொலிஸாரை கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது வரை எமது முழுமையான சேவைகளை வழங்கி வருகின்றோம். ஓரிரு தினங்களில்
எரிபொருள் சீராகக் கிடைக்காவிட்டால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையே வழங்க
வேண்டிய நிலை ஏற்படும்'' என குறிப்பிட்டுள்ளார்.



