நாடாளுமன்ற அமர்வு 17ஆம் திகதி ஆரம்பம் - முக்கிய விவாதங்களுக்குத் திட்டம்
மார்ச் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன என்று நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து
இந்த மாத இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வுகளில் நாட்டின் தற்போதைய நிலவரங்களுக்குத் தேவையான சில முக்கிய சட்டமூலங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், தினமும் சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணைகள் மீதான விவாதங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
சமகாலத்தில் பேசுபொருளாகியுள்ள மத்திய கிழக்கு போர்ச் சூழல், அதன் காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், அண்மைய நாள்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரச ஊழியர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது.