தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம் - ரணிலின் திரைமறைவு காய்நகர்த்தல்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என சஜித் பிரமதாஸவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை வலியுறுத்தி எதிர்வரும் 8 ஆம் திகதி காலை கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணியை எதிர்த்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம்
இதனை சுஜீவ சேனசிங்க, பிரசாத் சிறிவர்தன மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் ஏற்பாடு செய்ததாக தகவல்கள் பரவியுள்ளன.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்றிணைவு தொடர்பான கலந்துரையாடல்களை பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பதாக வெளியான செய்திகள் போலியானவை என, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் பிளவு
இரு கட்சிகளிலும் உள்ள மிகச் சிறிய குழுவினர் மட்டுமே தங்கள் குறுகிய நலன்களுக்காக இரு கட்சிகளும் இணைவதை விரும்பவில்லை என்றும், அந்தக் குழுவின் எதிர்ப்பையும் மீறி, நாட்டின் நலனுக்காக இரு கட்சிகளும் இணைவார்கள் என்றும் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிளவுபட்டு சென்ற குழுபினால் ஐக்கிய தேசிய மக்கள் சக்தி என்ற அரசியல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அதன் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.