நடு வீதியில் அடிதடியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் - பாடசாலை அதிபர்
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் மத்துகம பாடசாலை அதிபர் ஒருவருக்கும் இடையில் கடும் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
காணி பிரச்சினையின் அடிப்படையில் நேற்று(03.08.2023) இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மத்துகம நகரில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அதிபர் இருவரும் தாக்கப்பட்டதாக மத்துகம பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு சொந்தமான காணியொன்று மத்துகம நகரின் மத்தியில் அமைந்துள்ளதுடன் அதனை அண்டிய காணி களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவருக்குச் சொந்தமானதாகும்.
காணிப் பிரச்சினை
குறித்த காணியில் முற்கம்பி வேலி அமைப்பதற்காக அதிபர் மற்றுமொரு குழுவினருடன் நேற்று காலை சென்றுள்ளார்.
இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் வந்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதுடன் மோதலாக மாறியதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சமரசம்
இந்த முரண்பாடு தொடர்பில் இரு தரப்பிலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மத்துகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று விசாரணை மேற்கொண்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், காணி சர்ச்சை தொடர்பான வழக்கை களுத்துறை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.