சூடுபிடிக்கும் பொதுத்தேர்தல் நகர்வுகள்: நாடாளுமன்றத்தை கலைக்க திட்டமிட்ட உறுப்பினர்கள்
தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி நாடாளுமன்றத்தை கலைக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சியை கட்டமைக்க தேவையான உறுப்பினர்களை திரட்ட முடியாததால், இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனரான பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மேற்கொண்ட சந்திப்பொன்றில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசியலமைப்பு ரீதியாக திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவிக்குமாறு கோரியுள்ளார்.
எனினும், ரணில் விக்ரமசிங்க அதற்கு உடன்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பசில் ராஜபக்சவுக்கு நம்பிக்கையுள்ள சில நாடாளுமன்ற உறுப்பிர்கள் நாடாளுமன்றில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, சபையை கலைத்து, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை கொண்டு வர வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
பொதுத்தேர்தல்
எவ்வாறாயினும், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கு தயாராக இல்லாத காரணத்தினால் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
மேலும், அரசியலமைப்பின்படி 2025இல் பொதுத்தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம் செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 18 க்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்ளும் வகையில் பொதுத்தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்தும் யோசனை ஒன்றும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |