நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.
காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும்.
இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்களிப்பு நடவடிக்கைகள்
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குருநாகல்
தேர்தல் வாக்களிப்பு மிகவும் சுமூகமான முறையில் குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது.
மாவத்தமக தேர்தல் தொகுதியில் பறகஹதெனிய வாக்குச் சாவடியில் காலையில் சரியாக 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12 வரையிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி மிக அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதேவேளையில், மக்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு வந்து மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பதை இங்கு காணக் கூடியதாக இருக்கிறது. இங்கு 977 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்தில் 14 தேர்தல் தொகுகளில் இருந்து 1417626 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி - செய்தி
மன்னார்
மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
செய்தி - லம்பேட்
முல்லைத்தீவு
முல்லைத்தீவிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க செல்கின்றனர்.
இந்நிலையில், வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸார் தீவிர தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி
இந்நிலையில், தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
செய்தி - யது
யாழ்ப்பாணம்
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திலும் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - கஜி, தீபன்
ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள்
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் ஆகஸ்ட் 22 ஆம் திகதி காலமானார்.
திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மொஹமட் இல்யாஸ் தனது 78 ஆவது வயதிலேயே காலமானார்.