சிறுவர்களை குறிவைத்து இரகசிய திட்டம்! பெற்றோருக்கு பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாட்டில் போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில்,போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், விருந்துபசார வைபவங்களை நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டமொன்றினை போதைப்பொருள் கடத்தல்காரர்களால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பெற்றோருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இந்த இரகசிய வேலைத்திட்டத்தின் முதல் இலக்கு பாடசாலை மாணவர்களெனவும் குறிப்பிட்டுள்ளார்.
விருந்து நிகழ்வுக்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு போதைக்கு அடிமையாகியுள்ளவர்கள் சில பானங்களை வழங்கி ஐஸ் போதை பொருள் பாவனையை ஊக்குவிப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சிறுவர்களை அழைத்து வரும் போது பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து கவனமாக செயற்படுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, ஒரு குழந்தை தன் பெற்றோரிடமிருந்து தூர விலகி செல்ல முயன்றால் அல்லது கல்வி, உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டாலோ, தூங்க முடியாமல் அவஸ்தை பட்டால் அவர்கள் போதைப்பொருளுக்கு ஆளாகியிருக்க நேரிடும்.
இது மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டி மரணத்தை ஏற்படலாம் எனவும் ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டுக்கான தேசிய ஆராய்ச்சி அதிகாரி நிலானி அலுத்கே தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் வீட்டில் பணம் கேட்டால் கவனமாக இருக்குமாறும், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்த நேரமும் விழிப்புடன் செயற்படுமாறும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் ஷாக்ய நானாயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.