ரஞ்சனுக்கு தற்போதைக்கு பொது மன்னிப்பு வழங்கப்படக்கூடிய சாத்தியமில்லையா?
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தற்போதைக்கு பொது மன்னிப்பு வழங்கப்படக்கூடிய சாத்தியமில்லை என தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விரைவில் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனவும், அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும் இந்த தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ரஞ்சனின் விடுதலை குறித்து நீதி அமைச்சினால் தமக்கு எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை என சிறைச்சாலைகள் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டால் முதலில் அது சிறைச்சாலை திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ரஞ்சன் விடுதலை செய்யப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டில் ரஞ்சனுக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.