பண்டோரா ஆவண விவகாரம்: இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவு?
பண்டோரா ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ள விடயங்கள் சம்பந்தமான இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நடத்திய வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர், அரசாங்கம் நடவடிக்கை ஒன்றை எடுக்கும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பண்டோரா ஆவணங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள திருக்குமார் நடேசன், நேற்று ஆணைக்குழுவிற்கு சென்று வாக்குமூலம் ஒன்றை வழங்கி இருந்தார்.
பண்டோரா ஆவணங்கள் மூலம் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உடனடியாக இது சம்பந்தமாக விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருந்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில், கடந்த திங்கள் கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது சம்பந்தமாக அமைச்சர்கள் பலர் கேள்விகளை எழுப்பி இருந்ததுடன் இந்த விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக நாட்டுக்கு தெரியப்படுத்துமாறும் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.