மட்டக்களப்பில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகம் சுற்றிவளைப்பு
மட்டக்களப்பு - காத்தான்குடியில் அனுமதிப் பத்திரமின்றி இயங்கி வந்த மருந்தகமொன்றை திடீரென சுற்றி வளைத்த விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்து போதை மாத்திரைகளை மீட்டுள்ளதுடன், பாமசி உரிமையாளர் உட்பட இருவரைக் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த மருந்தகம் நேற்று இரவு முற்றுகையிடப்பட்டுள்ளது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அங்கிருந்து போதையை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகள் மீட்கப்பட்டதுடன், வைத்தியர்களின் மருந்து எழுதப்பட்ட துண்டு இல்லாமல் மருந்துகள் வழங்கப்பட்டு வந்தமையும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மருந்தக பரிசோதகர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீல், காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பஷீர் ஆகியோர் ஸ்தலத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பாமசி மூடப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட இருவரையும் காத்தான்குடி
பொலிஸார் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளனர்.




