பாகிஸ்தானை தொடர்ந்து இலங்கையை உன்னிப்பாக கவனிக்கும் சர்வதேச நாணய நிதியம்!
இலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல தசாப்தங்களாக நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் தற்போது பொது அமைதியின்மை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை "மிக உன்னிப்பாக" கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திங்கட்கிழமை அமைச்சரவையை கலைத்து புதிய நிதியமைச்சரை நியமித்ததுடன், புதிய மத்திய வங்கி ஆளுநருக்காக அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளார்.
மத்திய வங்கிக்கான புதிய ஆளுநர் நியமிக்கப்படவுள்ள நிலையில் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அலி சப்ரி பதவி விலகியுள்ளார்.
அத்துடன் இதுவரை காலமாக திறைசேரியின் செயலாளராக பதவி வகித்த ஏ ஆர் ஆட்டிக்கலவும் இன்று பதவி விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
இந்த சூழ்நிலையிலேயே இலங்கையின் நிலையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை புதிதாக நியமிக்கப்படும் நிதியமைச்சர் வோஷிங்டனுக்கு பயணம் செய்து தமது அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதை தாம் எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் மசாஹிரோ நோசாகி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.



