பந்து வீச்சாளர் ஹசன் அலிக்கு கருணைக் காட்டுங்கள்: வசிம் அக்ரம் கோாிக்கை
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ண 20க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தொடர்பில் கருணை காட்டுமாறு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வசிம் அக்ரம் பாகிஸ்தானிய ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹசன் அலி, அவுஸ்திரேலிய அணியின் மெத்யூ வேட்டின் (Matthew Wade) பிடியை நழுவ விட்டதை அடுத்து, அவர் தொடர்ந்து மூன்று 6 ஓட்டங்களை (சிக்ஸர்களை) அடித்து தனது அணியை இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெறச் செய்தார்.
இதனையடுத்து ஹசன் அலி, ரசிகர்களால் சமூக ஊடகங்களில் தீவிர விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
நேற்றைய போட்டியில் ஹசன் அலி பந்துவீச்சில் 4 ஓவர்களில் 44 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றவில்லை.
போட்டியின் 19வது ஓவரில், பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுக்கக் கூடியவராக மாற ஹசனுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.
அதுவே மெத்யூ வேட்டின் (Matthew Wade) பிடியாக இருந்தது.
எனினும் அதனை அவர் கைநழுவ விட்டார். இது அவுஸ்திரேலிய அணிக்கு விலைமதிப்பற்ற சந்தர்ப்பத்தை வழங்கியது.
இச்சம்பவம் இடம்பெற்றதில் இருந்து ஹசன், பாகிஸ்தான் ரசிகர்களால் சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
இந்தநிலையில் ஏற்கனவே மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள, ஹசன் அலியை குறிவைத்து “எரியும் தீயில் எண்ணெய்யை” ஊற்ற வேண்டாம் என்று வசீம் அக்ரம், பாகிஸ்தானிய ரசிகர்களிடம் கோரியுள்ளார்.
இதேவேளை ஹசனின் பிடி நழுவலே ஆட்டத்தின் தலைவிதியை தீர்மானிப்பதில் பெரும் பங்கை வகித்தது என்று பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் ஆஸம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







