முதலாவது டெஸ்ட் போட்டியில் பின்னடைவில் இருந்து மீண்ட இலங்கை அணி
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பின்னடைவில் இருந்து மீண்டுள்ளது.
அந்த வகையில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இன்றைய முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றுவருகின்றது.
இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
சிறப்பான இணைப்பாட்டம்
எனினும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த அஞ்ஜலோ மெத்தியூஸ் மற்றும் தன்ஜய டி சில்வா ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர்.
இருவரும் இணைந்து 131 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த நிலையில், அஞ்ஜலோ மெத்தியூஸ் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் இணைந்த தனஞ்ஜய டி சில்வாவுடன் இணைந்த சதீர சமரவிக்ரம, 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்தார்.
இறுதியில் மழை காரணமாக 66 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டிருந்த நிலையில், முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்தது.
இறுதி வரை தனித்து நின்று போராடும் தன்ஞஜ டி சில்வா ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், ஷஹீட் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |