சுவிற்சர்லாந்து - பேர்ண் மாநிலத்தில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்
சுவிற்சர்லாந்து - பேர்ண் மாநிலத்தில் இயங்கும் வெளிநாட்டவருக்கான அமைப்பு (MIAu-Q)அனைத்து மக்களுக்கும் தேவையான தகவல்களை வழங்குவதற்கான ஓர் நிகழ்விவு கடந்த சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.
மேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது,
இந் நிகழ்வானது சுவிற்சர்லாந்து நாட்டினால் அமுல்படுத்தப்பட்ட சட்டவிதிகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு நடாத்தப்பட்டுள்ளது, குறித்த நிகழ்வு தொடர்பில் பேர்ண் மாவட்டத்தின் பேர்ண் மேற்குப்பகுதியின் (MIAu-Q) அமைப்பின் சமூக சேவை அமைப்பின் இணைப்பாளர் நந்தினி முருகவேள் கருத்து தெரிவிக்கையில்,
இந்நிகழ்வில் 150 இற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றியிருந்ததுடன், இங்கே முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான அதிகாரிகளை நாம் அழைத்திருந்தோம்.எமது கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்து சாதகமான தீர்வுகளை வழங்குமாறு கேட்டிருந்தோம்.
(MIAu-Q) என்னும் அமைப்பின் பொறுப்பாளர் இணையர் Steffi Scharerஆவார், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் மக்களிடையே அதிகரித்து வரும் பிரச்சினைகளான குடும்பப் பிணக்குகள், பிள்ளைகளின் பிரச்சினைகள், வதிவிட அனுமதிப்பிரச்சினை, முதியோருக்கான தேவைகள் என்பவற்றை இக்கலந்துரையாடலில் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் கலந்துரையாடி சாதகமான தீர்வுகளை நாடினோம்.
எடுத்துக்காட்டாக வதிவிட அனுமதிப்பத்திரத்தினை புதுப்பித்துக்கொள்வதற்கு ஜேர்மன் மொழி A1 வாய்மொழி மூலமான தேர்வுச்சான்றிதழை வழங்க வேண்டும். அதிகமான தமிழ்ப் பெண்களுக்கு ஜேர்மன் மொழியைக் கற்க விருப்பம் இருந்தும் அவர்களுக்கு சிறிய குழந்தைகள் இருப்பதனால் கற்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களாக அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் சார்பாக என்னால் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இது தொடர்பாக வருகை தந்த அரச அதிகாரிகளிடம் கலந்துரையாடி பேர்ண் நகரப்பகுதியில் மேலதிகமாக மூன்று இடங்களில் பிள்ளைகள் பராமரிப்புடன் ஜேர்மன் மொழி கற்பதற்கு தற்போது அனுமதி தந்துள்ளார்கள்.
என்னுடைய இக்கோரிக்கைக்கு என்னுடன் நின்று ஒத்துழைத்த பேர்ண் நகரப்பொறுப்பாளரும், என்னுடைய நண்பியுமான இணையர் Steffi Scharer இற்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த நிகழ்வில் ஆறு முக்கியமான விடயங்கள் ஆராயப்பபட்டன. ஆறு தகவல் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இங்கே வருகைதந்த அனைவரும் தங்களுக்கு விருப்பமான 2 தகவல் மையங்களைத் தெரிவு செய்து தமக்குத்தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றக்கொள்வதுடன் தமது விருப்பங்களையும் தேவைகளையும் தெரிவித்துக்கொள்ளலாம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.