ஹட்டன் பொலிஸ் பிரிவில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு
ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களுக்கும், பொலிஸ் நிலையங்களையும் அதன் வளாகங்களையும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஏடிஎஸ் (Aedes) வகை நுளம்புகள் பெருகுவதைத் தடுத்து, அவை கடிப்பதில் இருந்து பாதுகாத்து கொசுக்கள் அற்ற முறையில் பராமரிக்குமாறு ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பொலிஸ் நிலையங்களைச் சுற்றியுள்ள தேவையற்ற பொருட்கள், உடைந்த பாத்திரங்கள், சிரட்டைகள் மற்றும் பழைய டயர்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் , டெங்கு பரவலைக் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பாளர்களுக்கு உத்தரவு
இன்று செவ்வாய்க்கிழமை (21) ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் சார்பாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற அரையாண்டு பொலிஸ் பரிசோதனையின் போது பொலிஸ் நிலையத்தை முழுமையாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆய்வு செய்தார்.

அத்துடன் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை முறையான சுற்றுச்சூழல் பரிசோதனைகள் மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து அவ்விடங்களை சுத்தப்படுத்துதல் மற்றும் அழிக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாளரான பிரதம ஆய்வாளர் கபில விஜேரத்னவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த அரையாண்டு ஆய்வின்போது நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலைய அதிகாரிகள், ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருக்கு மரியாதை செலுத்தினர்.மேலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் அதிகாரிகளை பரிசோதனை நடத்தினார்.
இதில் அணிநடை வகுப்பு மரியாதை,, அணிநடை கண்காட்சி மற்றும் பரிசோதனைகள் என்பன இடம்பெற்றன.




