ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்னவை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிரேஷ்ட சட்டத்தரணி
வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தற்போது மரணமடைந்துள்ளதாக சந்தேக தரப்பினர் சார்பில் நேற்று விசாரணைக்கு வந்திருந்த சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரன நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கமைவாக, தீர்வை பதிவு செய்வதற்காக நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, சந்தேகநபரோ அவரது உத்தரவாததாரரோ நீதிமன்றில் முன்னிலையாகாமை தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிமன்றம், ஹேஷா விதானகே தொடர்பில் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |