கொழும்பு துறைமுகநகர முத்தரப்பு ஒப்பந்தத்தை வெளியிட தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவு
நீண்ட கால விசாரணையின் பின்னர் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தத்தை வெளியிடுமாறு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
2017 இல் கையெழுத்திடப்பட்ட இந்த முத்தரப்பு உடன்படிக்கை, பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சகம், நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி (CHEC) Port City Colombo Ltd ஆகியவற்றுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டது.
தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு
2018 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) இந்த ஒப்பந்தத்தின் நகலை பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சகத்திடம் கோரியிருந்தது, எனினும் இரகசிய உட்பிரிவுகள் இருப்பதால் அந்த கோரிக்கை மறுக்கப்பட்டது.
இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு, தகவல் அறியும் உரிமை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனினும் நான்கு ஆண்டுகள் இது தொடர்பான விசாரணை நீடித்து வந்துள்ளது. இதுவே ஆணையத்தின் வரலாற்றில் மிக நீண்டது என குறிப்பிடப்படுகின்றது.
ஆவணம்
இந்தநிலையில் இறுதி உத்தரவை பிறப்பித்த தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பின்டோ ஜயவர்தன, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினால் எந்த சரத்துக்கள் இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனவே, ஆவணத்தை பொதுக் களத்திற்கு வெளியே வைத்திருப்பதன் அவசியம் ஏற்படவில்லை
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.