மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இழப்பீடு கோரி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் குறித்து, முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிலருக்கு எதிராக பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இதனையடுத்து தம்மை வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தார் எனினும் அந்த கோரிக்கையை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.
இதனை தொடர்ந்தே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு குடியியல்
மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்து, மாவட்ட
நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது எனத் தெரிவித்து, வழக்குகளில் இருந்து
தன்னை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.



