ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய சிறுமி மரணம்! - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 அகவை சிறுமி மரணமானமை தொடர்பாக ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மூன்று பேரின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை வழங்குமாறு சேவை வழங்குநர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கை நேற்று விசாரணைக்கு வந்தபோது, அந்த பதிவுகளை பொரல்லை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டார்.
தொலைபேசி பதிவுகளுக்கு மேலதிகமாக, சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்த இடைத்தரகரின் வங்கி கணக்கு விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிட்டது.
2021, ஜூலை 15 ம் திகதி, பதியுதீன் இல்லத்தில் வீட்டு உதவியாளராக பணியாற்றிய 16 அகவை சிறுமி, தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஜூலை 03ம் திகதி அனுமதிக்கப்பட்டு அவர் 12 நாட்களின் பின்னர் மரணமானார்.
தலவாக்கலை, டயகம பகுதியில் வசித்து வந்த இந்த சிறுமி, கடந்த அக்டோபரில் வீட்டு வேலைகளுக்காக பௌத்தாலோக்க மாவத்தயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டபோது அவருக்கு 15 அகவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



