பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமனம்! கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்தமையை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வன்மையாக கண்டிப்பதாக கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது.
ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அவமதிக்கும் செயலாளர் என்றும், தேசபந்து தென்னகோன் மீது காணப்படும் குற்றச்சாட்டுக்கள் எவற்றையும் கருத்திற்கொள்ளாது அவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் மூலம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பதும் தெளிவாகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இந்த நியமனமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயலாகும்.
273 அப்பாவி மக்களை கொலை செய்த, மேலும் 500 பேரை படுகாயமடையச் செய்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை தடுப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும், அதனை உதாசீனப்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இதுவரையிலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசபந்து தென்னகோன் போன்றோர் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றியிருந்தால் 273 அப்பாவி மக்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். அவர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் உதாசீனப்படுத்தியதனாலேயே அவர்கள் கொல்லப்பட்டனர்.
அவ்வாறிருக்கையில் தேசபந்து தென்னகோன் போன்றோர் நாட்டின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை மிலேச்சத்தனமான செயற்பாடாகும்.
மக்களின் பாதுகாப்பு
2022 மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட 17 கோடியே 85 இலட்சத்தை வழக்கிற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்குமாறு கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நபரொருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பது புலப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு தேசபந்து தென்னகோனுடைய பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அமைச்சர் உட்பட ஜனாதிபதியை சூழவுள்ள சுயநலவாதிகள் சிலரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நியமனம் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
