திருகோணமலையில் காணிகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு
இந்திய நிதியுதவியுடன் திருகோணமலை சம்பூர் சூரிய சக்தி மின் திட்டத்திற்காக மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த சம்பூர் கிராமத்தில் உள்ள சிறுபான்மை தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தி இந்திய - இலங்கை சோலார் மின் உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டாம் என ட்ரின்கோ சேவ் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.கிரிஷான் குமார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திருகோணமலை ஊடகக் கழகத்திற்கு கிழக்கிலிருந்து ஊடகவியலாளர்களை அழைத்த கிரிஷான் குமார், நிலக்கரி மின் திட்டத்திற்காக மக்களின் காணிகளை சுவீகரிக்க 2015ஆம் ஆண்டு முதல் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
“பொதுமக்களின் எதிர்ப்பால் இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தடுக்கப்பட்டது. மீண்டும் இவ்வாறான காணிகள் கையகப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் சம்பூர் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.
” பல தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் சம்பூர் மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். சம்பூர் மக்களின் காணிகள் மீளக் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கின்றோம் என ட்ரின்கோ சேவ் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மின் கம்பனி, NTPC இந்தியா மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க மார்ச் 11 அன்று கைச்சாத்திடப்பட்டது.
100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆரச்சி, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோரது பிரசன்னத்துக்கு மத்தியில் நடைபெற்றது.
NTPC சர்வதேச வர்த்தக அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி நரிந்தர் மோகன் குப்தா, இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பேர்டினான்டோ, TPCL தலைவரும் இலங்கை மின்சார சபையின் உப தலைவருமான என்.எஸ். இலங்ககோன் உள்ளிட்டோர் இந்த முத்தரப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அன்றைய தினமே மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவாட் காற்றாலை மின்
நிலையங்களை அமைப்பதற்கு அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் நிதி அமைச்சு
ஒப்பந்தம் செய்து கொண்டது.