இலங்கை மீது ட்ரம்ப் விதித்த வரியால் மகிழ்ச்சியடைந்த அரசியல்வாதிகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை மீது வரி விதித்த போது எதிர்க்கட்சியினர் கூடுதலாக மகிழ்ச்சி அடைந்தார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தரப்பினர் இந்த வரி மூலம் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து மகிழ்ச்சி அடைந்ததை விடவும் கூடுதலாக இலங்கையின் எதிர்க்கட்சிகள் இந்த வரி விதிப்பினால் மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஆரூடம்
இந்த அரசாங்கம் வீழ்ந்து விடும், தொழிற்சாலைகள் மூடப்படும் என எதிர்க்கட்சியினர் கொண்டாடியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போது அரசாங்கம் மூன்று மாதங்களில் கவிழும் எனவும், பின்னர் அது ஆறு மாதங்களில் கவிழும் எனவும் எதிர்க்கட்சிகள் ஆரூடம் கூறியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இந்த அரசாங்கம் கவிழும் என எதிர்க்கட்சியினர் தற்பொழுது எதிர்வு கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் முதலீடு செய்ய வருபவர்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை உருவாக்கி பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே இவ்வாறு எதிர்வுகூறல்கள் வெளியிடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வவகையில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உலக அரசியல் பொருளாதார நிலைமைகளிற்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தமது அரசாங்கத்தின் இலக்கு என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.