ரணில் தரப்பின் முயற்சிக்கு சஜித் தரப்பிடமிருந்து பாராட்டு
இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை வரவேற்கத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா (Harsha De Silva) மற்றும் கபீர் ஹாசிம் (Kabir Hasim) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பாரிஸ் க்ளப் ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு நாம் ஆபத்தை விளைவிக்க எண்ணவில்லை என ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச இறையாண்மை பத்திர உரிமையாளர்கள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கை எட்டப்படாத வரை இந்த கடன் மறுசீரமைப்பு திட்டம் நிறைவு பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்று யோசனை
அதேவேளை, சர்வதேச இறையாண்மை பத்திர உரிமையாளர்கள் 7 சதவீத கடன் குறைப்பை (Haircut) இலங்கைக்கு வழங்க உடன்பட்டுள்ளனர். இது பரந்த பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய ஒன்றாகும்.
எனினும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவடையும் போது கடன் குறைப்பு வீதமும் குறைவடையும். இதனால் இந்த ஒப்பந்தத்துக்கு இலங்கை சம்மதிக்கக் கூடாது என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு மாற்று யோசனை சிறந்த ஒரு முயற்சி எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |