இணைய வழி மோசடிகள் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை
இணைய வழி மோசடிகள் தொடர்பில் மீண்டும் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். டிஜிட்டல் மற்றும் இணைய வழி மோசடிகள் பாரதூரமான அச்சுறுத்தல்களாக மாறியுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணைய தொடர்பாடல் வழிமுறைகளை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றவாளிகள் புதிய தொழில்நுட்பங்களை விரைவில் கற்றுக்கொண்டு அதன் ஊடாக மோசடிகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இணைய வழி மோசடிகள் மற்றும் கணனி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றச் செயல்களில் பாதிக்கப்படுபவர்கள் 24 மணித்தியாலங்களும் தங்களது முறைப்பாடுகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடவுச் சொற்கள், ஓ.ரீ.பி இலக்கங்கள் மற்றும் பின் இலக்கங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் சந்தேகத்திற்கு இடமான இணைப்புகள் அல்லது லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் இத்தகைய மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வூட்லர் வலியுறுத்தியுள்ளார்.