மழைக்கு மத்தியிலும் வவுனியாவில் நடமாடும் தடுப்பூசித்திட்டம்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மழைக்கு மத்தியிலும் ஒரே நாளில் 30 பேருக்கு நடமாடும் தடுப்பூசித்திட்டம் மூலம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் முகமாக வவுனியாவில் நடமாடும் தடுப்பூசி திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்ட நிலையில் வீடுகளிலிருந்து வர முடியாத நோய் தாக்கம் காரணமாக வீடுகளில் இருப்போர், தடுப்பூசி பெறத் தவறியோர், விசேட தேவைக்குட்பட்டோர் மற்றும் கிராம அலுவலர் ஊடாக நடமாடும் தடுப்பூசிக்கு விண்ணப்பித்தோர் எனப் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று சினோபாம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த வைத்தியர் பிரசன்னா தலைமையில் மழைக்கு மத்தியிலும் றம்பைக்குளம், குட்செட்வீதி, வவுனியா நகரம், பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், தோணிக்கல், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளில் 30 பேருக்கு சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
கிராம அலுவலர் ஊடாக கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களுக்கு அமைவாகக் குறித்த நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் மேலும் சில தினங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.