துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் பலி-சிறுவன் உட்பட இருவர் காயம்
காலி யக்கலமுல்ல மாதெர களுவலகல பிரதேசத்தில் கறுவாய் வாடி ஒன்றில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 வயது சிறுவனும் மற்றுமொரு நபரும் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்தாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்
கறுவா வாடிக்குள் கறுவாப்பட்டைகளை நைத்துக்கொண்டிருந்த 33 வயதான வெடிக்கருகே சமன் குமார என்ற நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்து இரண்டு பேர் ரி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட நபர் உரகஹ பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் கொலை வழக்கொன்றின் சந்தேக நபர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
யக்கலமுல்ல களுவலகல பிரதேசத்தில் பெண்ணொருவரை இந்த நபர் திருமணம் செய்துள்ளதுடன் கறுவாப்பட்டதை பதனிடும் இடத்தில் தொழில் புரிந்து வந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 5 வயதான சிறுவனின் வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் இருந்த 30 வயதான நபருக்கு துப்பாக்கிச் சூட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆபத்தான நிலைமையில் சிறுவன்
5 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பிள்ளை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக்குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மூன்று பேர் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை அச்சுறுத்தி மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் இரண்டு தோட்டக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யக்கலமுல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.