காட்டு யானை மோதி வாகனம் விபத்து : ஒருவர் மரணம் -16 பேர் காயம்
பிரதான வீதியைக் கடக்க முயன்ற காட்டு யானையொன்றின் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்றையதினம்(01.06.2026) பொலன்னறுவை அருகே நாகஸ்தென்ன, பந்தனகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
பொலன்னறுவைப் பிரதேசத்திற்கு வெசாக் யாத்திரை சென்றுவிட்டு நாகஸ்தென்னவிலிருந்து தெஹியத்தகண்டிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று பந்தனகல பகுதியில் காட்டு யானையொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேன், பிரதான வீதியின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்துக்கு பாதையைக் கடக்க முயன்ற யானை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்போது வேனில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் பிரதேசவாசிகள், அவ்வழியால் சென்ற ஏனைய பயணிகள் மூலம் மீட்கப்பட்டு, தெஹியத்தகண்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
காயமடைந்தவர்களில் ஐந்து வயதுக் குழந்தை மற்றும் 10 மாதக் கைக்குழந்தையும் உள்ளடங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் பத்து பேர் தெஹியத்தகண்டிய மருத்துவமனையிலும், கவலைக்கிடமான நிலையில் இருந்தவர்கள் பொலன்னறுவை பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 54 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தெஹியத்தகண்டிய, நாகமுவாவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.