நாட்டின் தற்போதைய நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளது. முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களால் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அன்டனி மென்ரிஸ் தெரிவித்தார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவல் காணப்படுகிறது. தற்போது வைத்தியசாலைகளில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்கள் அனைவரும் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர்.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் ஒமிக்ரோனிடமிருந்து தப்பிக்க முடியாது. காரணம் இரு கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் கூட அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் மூன்று கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒரு தொற்றாளர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும் இவர் நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராவார்.
எவ்வாறிருப்பினும் இவர் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளமையால் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவார் என்று நாம் நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.