க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவி வீதியில் மயங்கிய நிலையில் மீட்பு
கண்டி, தலாத்து ஓயா பொலிஸ் பிரிவில் உள்ள கிரிமெட்டிய வீதியில் இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதவிருந்த 15 வயது மாணவி ஒருவர், சுயநினைவின்றி கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டதை அடுத்து, சுவசெரிய ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தலாத்து ஓயா பொலிஸ் பிரிவில் உள்ள பெல்வுட் சந்தியிலிருந்து கிரிமெட்டியவுக்குச் செல்லும் வீதியில் மாணவி மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.
பொலிஸாருக்கு தகவல்
மாணவியின் தாயார் தனது மகள் வீட்டை விட்டு காணாமல் போயுள்ளதாக 119 என்ற அவசர பிரிவிற்கு அழைப்பேற்படுத்தி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதவிருந்த அதே வயதுடைய மற்றொரு மாணவனுடன் சிறுமிக்கு காதல் உறவு இருந்ததாகவும், இதற்கு அவரது வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தமையால் அவர் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறினாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிக்கு பாதிப்பு
மாணவி தற்போது பேசுவதில் சிரமத்தை அனுபவித்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அனுருத்த பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.