இலங்கையை விட்டு தப்பியோட தயாராகும் அரச அதிகாரி
மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக திணைக்கள உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் காரணங்களுக்காக சட்டத்திற்கு முரணாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரியே நாட்டை விட்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், அவர் தொடர்பான பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு எதிராக மோசடி
கலால் சட்டத்திற்கு முரணாக மதுபான உரிமம் வழங்குவது தொடர்பாக மதுக்கடை உரிமையாளர்களால் உயர் நீதிமன்றத்தில் மதுவரி திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அதிகாரி தனது விருப்பத்திற்கேற்ப வரம்பற்ற மதுபான உரிமங்களை வழங்க லஞ்சம் பெற்றுள்ளதாக மதுவரி திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் மோசடி மூலம் அரசாங்கத்திற்கு வரிப்பணம் நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் எதிர்வரும் விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே இவ்வாறு நாட்டை விட்டு செல்ல தயாராகி வருவதாக மதுவரி திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.